அதானிக்கு இம்புட்டு இழப்பா?
கவுதம் அதானி என்ற ஒற்றை மனிதர் பல ஆண்டுகளாக சிறுக சிறுக சேமித்த வியாபார திறமையை ஹிண்டன்பர்க் அறிக்கை போலி என்று கூறி ஒருமாதம் கடந்துவிட்டது. கடந்த ஜனவரி 24ம் தேதி கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் சந்தை மூலதனம் 12 லட்சம் கோடி ரூபாய் சரிந்துள்ளது. அதாவது 19 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதன மதிப்புடன் உலா வந்த கவுதம் அதானியின் சந்தை மதிப்பு நேற்று(பிப்ரவரி 24ம்) தேதி 7லட்சத்து 15ஆயிரம் கோடி ரூபாயாக சரிந்துகிடக்கிறது. ஒரு சிலநிபுணர்களின் கணக்கீட்டின்படி அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு 25 லட்சம் கோடி ரூபாயாக இருந்து தற்போது சரிந்து 17லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் சந்தை மதிப்பு தற்போது 16லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.டாடா குழுமத்தின் டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 12.44 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் அதானி குழுமத்தில் மிகப்பெரிய சரிவாக அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் 81% சரிவை சந்தித்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் அப்படி என்னதான் கூறப்பட்டது என்று பார்த்தால்,அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவன பங்குகள் 1398% உயர்வு என்றும்,அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவன பங்குகளின் லாபம் 729%அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதானி குழுமத்தில் 7 நிறுவனங்கள்,85%க்கும் அதிகமாக உயர்த்தி மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது. ஹிண்டன்பர்க் வீசிய அறிக்கை என்ற ஒற்றை ஊசிப்பட்டாசு,கவுதம் அதானியின் சொத்துமதிப்பை 79 பில்லியன் டாலரில் இருந்து 41.5பில்லியன் டாலராக சரிய வைத்துள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களில் இருந்த கவுதம் அதானி புளூம்பர்க் நிறுவன அறிக்கையின்படி தற்போது 29வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.