அதானி கேஸ் பத்தி நாங்க சொல்றோம் பாருங்க தீர்ப்பு…
அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் குறித்து வெளியிட்ட அறிக்கையும் அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகள் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதா இல்லையா என்பது பற்றி விசாரிக்கக் கோரி 4 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனை கடந்த 17ம்தேதி உச்சநீதிமன்றம் விசாரித்து,தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். அந்த 4 பேரில் ஒருவராக எம்எல் சர்மா என்பவர், கோர்ட் தீர்ப்பு வரும்வரை ஊடகங்கள் அதானி குழுமம் பற்றி செய்தி வெளியிட நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதனை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய தலைமை நீதிபதி சந்திரசூட், எங்கள் உத்தரவை நாங்கள் தருகிறோம் என்றார். உள்துறை அமைச்சகமும், செபியும் விசாரணை நடத்த வேண்டும் என்று சர்மா கேட்டிருந்தார்.மேலும் அதானி குழுமத்தின் மீது புகார் தெரிவித்துள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம் மற்றும் நாதன் ஆண்டர்சன் என்பவரின் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டிருந்தார். சர்மா,விஷால் திவாரி, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெயா தாகூர், மற்றும் சமூக ஆர்வலர் முகேஷ் குமார் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்துள்ள நிலையில்,இதில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று திவாரியும், நடப்பு நீதிபதிகள் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெயா தாகூரும் கோரியிருக்கின்றனர். 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள இழப்பை அதானி குழுமம் ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு சந்தித்துள்ளது. விதிகளை மீறி செயல்பட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம், அதானி குழுமத்தின் மீது புகார் தெரிவித்தாலும் தாங்கள் இதுவரை சட்ட விதிகளை மீறி எதையும் செய்யவில்லை என்று அதானி குழுமம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.