ஏழை வெங்காய விவசாயிகள் “ஜி”க்கு எழுதும் கண்ணீர் கடிதம்…!!!
தோலை உரித்தால்தான் உரிப்பவர்கள் கண்களில் தண்ணீர் வரும் என்று கேள்விப்பட்டிருப்போம் ஆனால் வெங்காயத்தை உற்பத்தி செய்வோரின் கண்களிலும் கண்ணீர் ததும்புகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பல விவசாயிகள் வெங்காயத்தை நம்பியே பிழைப்பை நடத்தி வருகின்றனர். பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம் அமோக விளைச்சலை இந்தாண்டு கண்டுள்ளது. ஆனால் பயிர் வைக்க ஆன செலவுக்கு கூட வெங்காயத்தை விற்பனை செய்ய முடியவில்லை என்றும், வெங்காயத்தை வயலில் இருந்து பிரித்து எடுக்கும் பணியாளர்களுக்கு தரும் கூலிக்கு கூட வெங்காய விலை கட்டுப்படி ஆகவில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்த தமக்கு 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே கைகளில் கிடைக்கிறது என்று சுனில்பர்குடி என்ற விவசாயி தெரிவித்துள்ளார். ஒரு கிலோ வெங்காயம் 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காய விலை ஒரு பக்கம் இருக்க, உருளைக்கிழங்குக்கும் உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாபில் விளையும் உருளை கிழங்கு, கிலோ 4 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் வெங்காயத்துக்கும்,உருளைக் கிழங்குகளுக்கும் விலை கிடைக்காததால் நாசிக்கில் விவசாயிகள் தங்கள் வெங்காயத்தை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சிலர் பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்க வெங்காயத்தை அனுப்பி வைத்தனர். உற்பத்தி செய்த உருளைக்கிழங்குகளை சேமித்து வைக்க கிடங்குகளுக்கு முன்பணம் தர வேண்டியுள்ளதால் அதற்கு கூட தங்களிடம் பணம் இல்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வெங்காய விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை காப்பாற்றும் நோக்கில் நடுத்தரவிலையைில் வெங்காயத்தை அரசு அமைப்புகள் வாங்க மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உரிய இழப்பீடு தரவேண்டும் என்று விவசாயிகளும்,விவசாய அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.