முதல்நாளே 4 லட்சம் கோடி நட்டம்!!!
வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் உண்டாகியுள்ளது. மார்ச் 13ம் தேதியான திங்கட்கிழமை,இந்திய பங்குச்சந்தைகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தன. அமெரிக்கா தும்மினால் உலகத்துக்கே சளிபிடிக்கும் என்ற அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பு இந்திய சந்தைகளில் அமெரிக்காவால் ஏற்பட்டுள்ளது. சிலிக்கான் வேலி வங்கி திவாலானதால், அதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் மிகப்பெரியதாக காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 897புள்ளிகள் விழுந்து நொறுங்கின.வர்த்தக நேர முடிவில் 58 ஆயிரத்து237 புள்ளிகளாக அந்த பங்குச்சந்தை வணிகத்தை முடித்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 258 புள்ளிகள் சரிந்து, 17 ஆயிரத்து 154 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை இந்திய சந்தைகள் சந்தித்துள்ளன. இந்திய சந்தையில் 764 பங்குகள் ஏற்றமும்,2748 பங்குகள் சரிவையும் சந்தித்தன. பட்ஜெட் தினத்தில் சரிந்ததைவிட மிக அதிகளவாக பங்குச்சந்தைகள் சரிந்தன. அதாவது முதலீட்டாளர்களுக்கு 4.5லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் உருவாகியுள்ளது. ஒரே நேரத்தில் சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகியவை திவாலானதால் அமெரிக்காவில் நிலை சிக்கலாக உள்ளது. நிஃப்டி பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 2.87 விழுக்காடு சரிந்துள்ளன.இந்திய வங்கி கட்டமைப்பு வலுவாக இருக்கும் சூழலில் சிலிக்கான் வங்கிக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கு வராது என்று இந்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய சில்லறை பணவீக்கமும் வரும் நாட்களில் உயரும் என்று அஞ்சப்படுகிறது.இது இந்திய பங்குச்சந்தைகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அஞ்சப்படுகிறது. பங்குச்சந்தை ஒருபக்கம் சரிந்து அதிர்ச்சி அளிக்கும் சூழலில், தங்கம் விலை ஏற்றம் மக்களை பாடாய் படுத்தி வருகிறது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் 440 ரூபாய் உயர்ந்து 42 ஆயிரத்து 600 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 55 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 325 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து 69 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது(இந்த விலைகள் 3விழுக்காடு ஜிஎஸ்டி வரியும்,செய்கூலி சேதாரமும் சேர்க்கப்படாத விலை என்பதை கருத்தில் கொள்க)