தொடந்து கத்தி வீசும் மார்க்!!!
அமெரிக்காவில் நிலவும் பொருளாதார மந்த நிலையால் மக்கள் பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றால் அது மிகையல்ல. பல நாடுகளுக்கு பஞ்சாயத்து செய்யும் அமெரிக்கா சொந்த நாட்டில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல் தடுமாறுகிறது. நிதிநிலை சிக்கலை காரணம் காட்டி பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக அண்மையில் மிகப்பெரிய நிறுவனங்களான கூகுள், பேஸ்புக்கின் தாய்நிறுவனமான மெட்டா, டிவிட்டர், என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி டெக் நிறுவனங்களும் தங்கள் ஆட்களை குறைத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வரிசையில் தற்போது பேஸ்புக்கின் தாய்நிறுவனமான மெட்டா, 2வது சுற்றாக கூடுதலாக 10 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்க இருக்கிறது. முதல் சுற்றில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை நீக்கிய 4 மாதங்களுக்குள் அடுத்த கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது. புதிதாக 5 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்கும் திட்டத்தையும் அந்த நிறுவனம் கைவிட்டுள்ளது. தேவைக்கு அதிகமாக பொறியாளர்களை எடுத்து மெட்டா வெர்ஸ் திட்டத்தை பெரிதுபடுத்த நினைத்த மெட்டாவின் சிஇஓ மார்க் ஜூக்கர்பர்க்குக்கு இதுவே பாதகமாக அமைந்துவிட்டது. ஆட்குறைப்பு செய்ய இருப்பதாக அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் பேஸ்புக்கின் பங்குகளின் விலை கிடுகிடுவென 2 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 5 பில்லியன் அமெரிக்க டாலரை மிச்சம்பிடிக்க மார்க் எடுத்த முயற்சிகளுக்கு கைமேல் பலன் கிடைத்து வருகிறது. கோல்ட்மேன் சாச்ஸ்,அமேசான், மைக்ரோசாஃப்ட் என கிட்டத்தட்ட அனைத்து பெரிய நிறுவனங்களும் இந்த பழம் இனிக்கிறதே என்று ஆட்குறைப்பை கையில் எடுத்துள்ளனர். ஆனால் அதில் பணியாற்றும் வாழ்வாதாரத்தை பற்றி துளியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் 2022 முதல் இதுவரை தங்கள் பணியாளர்களில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். அதிலும்40விழுக்காடு பணிநீக்கம் இந்தாண்டுதான் நடைபெற்றுள்ளது இது இன்னும் அதிகரிக்கவே வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பேஸ்புக் நிறுவனம் ஆரம்பித்ததில் இருந்து கடந்த 18 ஆண்டுகளில் இத்தகைய ஆட்குறைப்பு நடந்ததே இல்லை என்றும் கடந்தாண்டும் தற்போதும் செய்யப்படும் ஆட்குறைப்பு அந்த நிறுவன வரலாற்றில் மிகமுக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது. 2022 இறுதிவரை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் பணியாளர்கள் எண்ணிக்கை 86 ஆயிரத்து482 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.