99 ரூபா பேங்க்ல இவ்ளோ முதலீடா…
அமெரிக்காவின் பிரபல வங்கியான சிலிக்கான் வேலி வங்கி திவாலாகிவிட்டது. இந்த வங்கியின் பிரிட்டன் கிளையை பிரபல hsbc வங்கி வெறும் 99 ரூபாய் 13 காசுகளுக்கு வாங்கியது உலகளவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் குறிப்பிட்ட இந்த வங்கியில் போதிய நிதி தேவை என்பதால் 2 பில்லியன் பவுண்டுகளை எச்எஸ்பிசி வங்கி களமிறக்கியுள்ளது. தேவை ஏற்பட்டால் கூடுதல் நிதியை கூட அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது. சிலிக்கான் வேலி வங்கி கிளையை வாங்கிவிட்ட எச்எஸ்பிசி வங்கி,வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பையும் நம்பிக்கையை அளிக்கும் வகையில் பேச ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவாலாகும் சூழல் நிலவிய போதே வங்கியில் முதலீடு செய்தவர்கள் பிரிட்டன் அரசாங்கத்துக்கு தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். இதனையடுத்து சிலிக்கான் வேலி வங்கியின் பிரிட்டன் கிளையை ,இங்கிலாந்து அரசு வெறும் 1 பவுண்டு விலைக்கு ஏலமிட்டது. இதனை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட எச்எஸ்பிசி வங்கி, 1 பவுண்டுக்கு சிலிக்கான் வேலி வங்கியை தன்வசப்படுத்திக்கொண்டது.
இதன் காரணமாக சிலிக்கான் வேலி வங்கியின் பிரிட்டன் கிளையில் கணக்கு வைத்திருந்த 3 ஆயிரம் முதலீட்டாளர்கள் தக்க வைக்கப்பட்டனர்.குறிப்பிட்ட இந்த நிறுவனம் பிரிட்டனில் 6.6பில்லியன் அமெரிக்க டாலர் கடனை பிரிட்டனில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் வங்கி கட்டமைப்பு மிகவும் நேர்த்தியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதால் முதலீட்டாளர்கள் கலக்கமின்றி இருக்கின்றனர். அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு லேமன் பிரதர்ஸ் , சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கிகள் திவாலாகி மிகமோசமான வீழ்ச்சி என்ற சாதனையை அந்நாட்டு வரலாற்றில் பதித்துள்ளனர்.