கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் செபி…
இந்திய பங்குச்சந்தைகளில் நிதியை முறைப்படி பெற்று வளர்ந்த நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இந்த நிலையில் கடந்தசில மாதங்களாக ஆரம்ப பங்கு வெளியீடான IPOவில் சில குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனை சரி செய்ய செபி அமைப்பு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு தேவைப்படும் ஆவணங்களை சில நிறுவனங்கள் செபியிடம் அளித்திருந்தன. இதனை பார்த்த செபி அதிகாரிகள், இந்தியன் படத்தில் வரும் செந்திலைப் போல முக்கியமான டாக்குமென்ட் இல்லை ரிஜெக்டட் என கூறி திரும்பி அனுப்பியுள்ளனர். மேலும் அரைகுறையான ஆவணங்களை வைத்து அனுப்பிய 6 நிறுவனங்களுக்கே அதனை திரும்ப அனுப்பியுள்ளது செபி அமைப்பு. Go Digit General Insurance Ltd,Lava International,Paymate India,BVG India, ஓயோ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. பங்குகளை வெளியிட்டு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி திரட்ட இருந்த சமயத்தில், இந்த நிறுவனங்கள் சிக்கலை சந்தித்துள்ளன. பேடிஎம்,சொமேட்டோ,நைக்கா உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பெரிய இழப்பை சந்தித்து தவிப்புக்கு ஆளாகியுள்ள சூழலில், இதே பிரச்சனையில் மீண்டும் யாரும் சிக்கக்கூடாது என்பதற்காக இதை செய்துள்ளதாக செபி அதிகாரிகள் கூறியுள்ளனர். 18 ஆயிரத்து 300 கோடி நிதி திரட்ட திட்டமிட்ட பேடிஎம் நிறுவனம் பெரிய சிக்கலை சந்தித்து இப்போதுதான் மெல்ல மீண்டு வருகிறது. 2021ம் ஆண்டு பல IPOகள் மூலம் ஏகப்பட்ட பணம் குவிந்த நிலையில், கடந்தாண்டு முதலே உலக பொருளாதார மந்தநிலை பாதிப்பு தெளிவாக தெரியத் தொடங்கியது. இந்த நிலையில் செபியின் இந்த நடவடிக்கையால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர்.