கனவில் கட்டைய போட்ட அமெரிக்க நிறுவனம்!!!
இந்தியாவில் எரிபொருள் மூலமாக மின்சாரம் தயாரிப்பதில் நிலக்கரியின் பங்கு 74 விழுக்காடாக இருக்கிறது. சுற்றுச்சூழலை காக்கும் நோக்கத்துடன் தூய்மையான ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க பிரதமர் மோடி பல முன்னெடுப்புகளை செய்துவருகிறார். பிரதமர் மோடியின் கனவுகளை மெய்ப்பிக்க அனைத்து சாத்தியமான வழிகளையும் அதானி குழுமம் செய்து வருகிறது. அதானி குழுமத்தின் டோட்டல் எனர்ஜிஸ் என்ற நிறுவனம் மூலமாக தூய்மையான ஆற்றலை பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி குழுமத்தின் மீது சரமாரி புகார்களை முன்வைத்ததால், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் திட்டத்தை அதானி குழுமம் கிடப்பில் போட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் குறிப்பிட்ட அளவு மின் ஆற்றலை உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்ட நிலையில், கடந்த 2021ம் ஆண்டே முதலீடுகள் பெறப்பட்டன. ஆனால் அதற்கான நிதியும் மதிப்பும் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளன. இந்தியாவைத் தவிர்த்து மற்ற நாடுகள் பசுமை ஆற்றலை பயன்படுத்த அதிக தொகை செலவு செய்து வரும் நிலையில் இந்திய மிகக்குறைவாகவே செலவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூய்மையான ஆற்றலில் இருந்து மின்சாரம் தயாரிக்க சீனா 274 பில்லியன் அமெரிக்க டாலர்களும், அமெரிக்கா 49.5 பில்லியன் டாலர்களும் செலவிட்டுள்ளது. இந்தியா வெறும் 11.5 பில்லியன் டாலர் மட்டுமே செலவழித்துள்ளது. நம்மை விட ஏழை நாடான பிரேசிலில் கூட 14.8 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. ஜப்பானில் 12.6பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கரியமில வாயுவெளியேற்றிவிட்டு உலகத்தை தூய்மையாக காக்க வேண்டியதன் அவசியம் குறித்து பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள சூழலில், அதற்கான பணிகளில் அதானி குழுமம் இந்தியாவில் களமிறங்கிய நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கையால் அந்த திட்டம் பாழானது.இதனால் பிரதமர் வைத்த இலக்கு அளவுக்கு தூய்மை ஆற்றல் உற்பத்தி என்பது கேள்விக் குறியாகியுள்ளது.