பென்ஷன் பணம் சிலருக்கு கிடைக்கலையாமே…
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது பலரும் ரத்தமும் வியர்வையும் சிந்தி சம்பாதித்த கடின உழைப்பால் உருவான பணமாகும்.இந்த பணத்தை PFஎன்ற பெயரில் நிறுவனங்கள் பிடித்தம் செய்து ஊழியர் ஓய்வு பெறும்போது பென்ஷனாக தரப்படுகிறது. இந்த நிலையில் அதிக பென்ஷன் கேட்டு சிலர் விண்ணப்பித்திததாக கூறி கடந்த ஜனவரி முதல் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும் பென்ஷன் தொகை வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. ஏன் தங்களுக்கு பென்ஷன் பணம் வரவில்லை என்று ஏராளமானோர் விளக்கம் கேட்டு PFஅலுவலகத்துக்குநோட்டீசும் அனுப்பியுள்ளனர்.இன்னும் சிலரோ PF மீது வழக்குப்பதிவு செய்யவும் ஆயத்தமாகி வருகின்றனர். எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல்தான் இந்த பென்ஷன் நிறுத்தம் நடந்துள்ளதாக ஏராளமானோர் தெரிவித்துள்ளனர். ஒரு சிலருக்கு மாத பென்ஷன் 30 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருந்த நிலையில் தற்போது அது 2372 ரூபாயாக வழங்கப்படுவதாகவும், கடந்த ஜனவரியில் இருந்து இந்த குறைத்து வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளதாகவும் பலர் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். ஒரே நேரத்தில் அதிக தொகையை பென்சனாக வழங்க முடியாது என்பதாலேயே இந்த நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளதாகவும், மீதத் தொகையை அளிக்க PFநிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2014ம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு தான் இந்த பிரச்சனை இருப்பதாகவும் விரைவில் இது தொடர்பான நிலை அறிக்கை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஓய்வூதியத்தை நம்பியே வாழ்க்கையை நடத்தும் சிலருக்கு PF பணத்தில் மிகச்சிறிய தொகையே கிடைத்திருப்பது பேரிடியாக அமைந்துள்ளது. வயதானவர்களை அலைக்கழிக்காமல் பணத்தை அரசாங்கம் தந்துவிடுமா என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.