பியூச்சர பத்தி அவங்களால சொல்ல முடியாது!!!
இந்தியா மட்டுமின்றி பெரும்பாலான நாடுகளில் பணவீக்கம் மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கங்களின் கைகளில் இருக்கும் கடைசி ஆயுதம், மத்திய ரிசர்வ் வங்கிகளின் வாயிலாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது மட்டுமே.. இதனை பல நாடுகளும் தற்போது செய்து வருகின்றன. இந்நிலையில் வரும் 6ம் தேதி ரிசர்வ் வங்கியின் முக்கியமான கூட்டம்(நிதி கொள்கை கூட்டம்) ஒன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கடன்களின் மீதான வட்டியை எவ்வளவு வரை உயர்த்தலாம், யாருக்கெல்லாம் இது பாதகமாகும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. வரும் 6ம் தேதி 25 அடிப்படை புள்ளிகளை உயர்த்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டு உள்ளது. இப்போதைக்கு இந்த அளவில் மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தேவை ஏற்பட்டால் வருங்காலத்தில் இதனை மேலும் உயர்த்தவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த ஒரு அதிகாரபூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை. ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் பணவீக்க அளவு ரிசர்வ் வங்கி வைத்த இலக்கான 6%க்கும் அதிகமாகவே இருந்ததால் அதனை கட்டுக்குள் கொண்டுவர வட்டி விகிதம் நிச்சயம் 25 அடிப்படை புள்ளிகள் உயரும் என்று நிபுணர்கள் அடித்துக் கூறுகின்றனர். வரும் 6ம் தேதி வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் கடந்த 7 ஆண்டுகளில் இதுதான் அதிகபட்ச அளவாகும். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடுகையில் அண்மையில் ரிசர்வ்வங்கி உயர்த்திய வட்டிவிகிதம் குறைவு என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஒரு பெரிய கணக்கெடுப்பையும் எடுத்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி தற்போது வரை 6.9% ஆக இருக்கும் என்றும் , ஏப்ரல் 1-ம் தேதி முதல் அதாவது அடுத்தாண்டு பொருளாதார வளர்ச்சி 6 %ஆக இருக்கும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.