ஏப்ரல் 1 முதல் வரும் மாற்றங்கள் தெரியுமா?
ஏப்ரல் 1-ம் தேதி முதல் வருமான வரி சார்ந்த பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. முன்பு, பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறைகளின் கீழ் வருமான வரிவிலக்கு வரம்பு 5 லட்சம் ரூபாயாக இருந்தது. அதாவது 5 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு எந்த வரியும் இல்லை. தற்போது, இந்த நடைமுறையில், புதிய வரி முறையில் மட்டும் வரிவிலக்கு வரம்பு 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், NEW TAX REGIMEல் மட்டும் 7 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ள ஊழியர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. பழைய வருமான வரி விதிப்படி, STANDARD DEDUCTION உடன் சேர்த்து 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருக்கும் பட்சத்தில், அவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. அதன்பிறகு, முன்பு இருந்த அதே வரி முறை நடைமுறையில் இருக்கும். புதிய வருமான வரி முறையின் படி, ஏப்ரம் 1ம் தேதி முதல், 7 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் இருக்கும்பட்சத்தில், 3 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரையான வருமானத்துக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும். 6 முதல் 9 லட்சம் ரூபாய் வரை 10 சதவீதமும், 9 லட்சத்தில் இருந்து 12 லட்சம் ரூபாய் வரை 15 சதவீதமும், 12 லட்சத்தில் இருந்து 15 லட்சம் ரூபாய் வரை 20 சதவீதமும், 15 லட்சத்திற்கு மேல் 30 சதவீதமும் வரை வரி செலுத்த வேண்டும். இவை மட்டுமின்றி ஆண்டு வருமானம் 5 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள தனி நபர்களுக்கு, புதிய வரி விதிப்பின் கீழ், கூடுதல் வரிஅளவு 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆயுள் காப்பீட்டை பொறுத்தவரை ஏப்ரல் ஒன்றுக்குப் பிறகு எடுக்கப்படும் பாலிசிகளுக்கு ஆண்டு பிரீமியம் 5 லட்சம் ரூபாயை கடக்கும் பட்சத்தில், அந்த காப்பீட்டு திட்டங்களில் கிடைக்கும் முதிர்வுத் தொகைக்கு வரி செலுத்த வேண்டும். இந்த வரியானது ஒருவரின் வருமானத்தை பொறுத்து மாறுபடும். தங்க நகைகளை பொறுத்தவரை, ஹால்மார்க் முத்திரை உடன் ஆறு இலக்க தனித்த அடையாள எண்கள் உள்ள தங்க நகைகளை மட்டுமே ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் விற்பனை செய்ய நகைக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்றால் அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தங்க நகைகளிலும் 6 இலக்க அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், 4 இலக்க ஹால்மார்க் நகைகளை ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்பனை செய்ய முடியாது. வருமான வரியில், NEW TAX REGIMEல் புதிய மாற்றத்தையும் அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஒருவர் 7 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கினால், புதிய வரி முறையில் வரி செலுத்த தேவையில்லை. ஆனால் 7 லட்சத்து 100 ரூபாய் ஆண்டு வருமான வாங்கினாலும், வருமான வரியாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இதனை தவிர்க்கும் பொருட்டு, 25 ஆயிரம் ரூபாய் கூடுதல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 7 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் ஒருவர் செலுத்தக்கூடிய வருமான வரி என்பது, அவர் 7 லட்சம் ரூபாய்க்கு மேல் எவ்வளவு சம்பளம் வாங்குகிறாறோ, அதை விட அதிகமாக இருக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விலக்கு 25 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.