பெரு நிறுவனங்களாக இருந்தாலும் நாங்க விசாரிப்போம்!!!..
உலகளவில் பெரிய டெக் நிறுவனங்களாக உள்ள நிறுவனங்கள் இந்தியாவிலும் கிளைகளை வைத்துள்ளனர். இந்த நிலையில் அரசு வகுத்துள்ள விதிகளை மீறி சில நிறுவனங்கள் செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து விசாரித்து வருவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. அமேசான், டிவிட்டர், மெட்டா,கூகுள், ஆப்பிள்,பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் விதிமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய போட்டி ஆணையம் ஏற்கனவே கூகுள் மீதான 3 புகார்கள் குறித்து விசாரணை செய்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்கள் இந்திய போட்டி விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க cci இயங்கி வருவதாகவும், அவர்கள் அறிக்கையின்படியே அடுத்தகட்ட நகர்வு இருக்கும் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்கனவே இந்த விவகாரத்தில் கடந்த டிசம்பரில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் வடிவில் சந்தைகள் இயங்கும்போது அதில் விதிமீறல்கள் இருக்கிறதா என்பது குறித்து தனியாக ஒரு சட்டத்தில் உட்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதனை சட்ட வரம்புக்குள் கொண்டுவர இருப்பதாகவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.