சம்பள உயர்வு மட்டும் போதாது.. சில சலுகைகளையும் கொடுங்க பாஸ்…
கடந்தாண்டு ஜனவரியில் ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் வாங்கியது, இந்த நிறுவனத்தில் புதுப்புது மாற்றங்களை டாடா குழுமம் செய்து வருகிறது. இந்த சூழலில் அண்மையில் ஏர் இந்தியா விமானிகளுக்கான விடுமுறைகள் குறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 300க்கும் மேற்பட்ட நாட்கள் விடுப்பை 60ஆக குறைத்ததால் விமானிகள் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக சில மாற்றங்களை டாடா செய்துவரும் நிலையில் அப்படியெல்லாம் நி்னைத்த உடன் மாற்றிவிட முடியாது என்று விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு என சில விதிகள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சங்கத்தினர், தொழிலாளர்கள் சங்கத்தினரை கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுத்திருக்கக் கூடாது என்று சாடியுள்ளனர். டாடா குழுமத்தின் கையில் ஏர் இந்தியா மாறிய பிறகு சம்பள உயர்வு அளிக்க இருப்பதாக டாடா குழுமம் தெரிவித்திருந்த நிலையில் சம்பள உயர்வு மட்டுமே போதாது என்று கூறியுள்ள விமானிகள் சங்கத்தினர், தொழிலாளர்களின் நலனிலும் கவனம் செலுத்துங்கள் என்று நிர்வாகத்தை கேட்டு கொண்டுள்ளனர். விடுமுறைகளை குறைத்தாலும் அதற்கு நிகரான சம்பளத்தை டாடா குழுமம் வழங்க இருப்பதாக கூறியுள்ள நிலையில் இந்த முறையீடு ஏர் இந்தியாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.