ஜி 20 உச்சி மாநாட்டால் புத்துயிர் பெற்ற ஹோட்டல்கள்!!!
கொரோனா காரணமாக உலகின் பல நாடுகளிலும் முதலில் அடிவாங்கிய துறை என்றால் அது ஹோட்டல்கள் துறைதான் என்று சொல்ல வேண்டும். இந்த நிலையில் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று ஓய்ந்திருந்ததால் ஜி20 மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்துவதாக அறிவித்தது. இதற்கான முன் ஏற்பாடுகளை அனைத்து துறைகளும் இந்திய அரசும் செய்து வருகிறது. இந்த நிலையில் ஜ20 உச்சிமாநாட்டில் 300 அமர்வுகள் இந்தியாவில் நடைபெற இருக்கின்றன. இதில் உலகநாடுகளின் பல்வேறு தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இதன் காரணமாக 56 நகரங்களில் நவீன ஹோட்டல் அறைகளுக்கு தேவை அதிகரித்துள்ளது சுமார் ஒன்றரை லட்சம் பிரமுகர்கள் இதில் பங்கேற்க இருக்கின்றனர். இதனால் கிட்டத்தட்ட 3 லட்சம் ஹோட்டல் அறைகளுக்கு தேவை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஹோட்டல்கள் சங்க நிர்வாகிகள், 300 மீட்டிங்கிற்கு 1லட்சம் அறைகளும்,2 அல்லது 3 இரவுகளுக்கான நிகழ்ச்சிகளுக்கு 200 ரூம்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். முதல்தர பெருநகரங்கள் மட்டுமின்றி, இரண்டாம் தர நகரங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதனால் அந்த நகரங்களில் உள்ள சுற்றுலா சார்ந்த வணிகமும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜி20 கூட்டங்களுக்கு பிறகு 5 நட்சத்திர ஹோட்டல்களின் கட்டணங்கள் 20விழுக்காடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை,டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நட்சத்திர ஹோட்டல்களின் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.