நாங்க வேலையவிட்டு யாரையும் தூக்க மாட்டோம் – மாஸ் காட்டும் தமிழர்
பெரிய நிறுவனங்கள் என்றால் பந்தாவான பெரிய மெட்ரோ நகரங்களில் மட்டும்தான் இருக்கவேண்டும் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்தவர் சோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. அனைத்து படித்த இளைஞர்களும் நகரங்களை நோக்கி படையெடுக்கும்போது இவர் மட்டும் தனதுநிறுவனத்தை தென்காசியில் அமைத்துள்ளார். தற்போது தென்காசி சோஹோவில் 800 பேர் பணியாற்றுகின்றனர். விரைவில் மேலும் 1000 பேர் அங்கு பணியாற்ற இருக்கின்றனர். 4 நிலைகளாக பணிகள் அந்த நிறுவனத்தில் நடத்தப்பட இருக்கின்றன. தனது நிறுவனத்தை தென்காசியில் தொடங்கியது பற்றியும், உலகளாவிய பொருளாதார நிலைகள் பற்றியும் தனியார் நிறுவனத்துக்கு நீண்ட நேர்காணலாக ஸ்ரீதர் வேம்பு அளித்துள்ளார். அதில் தற்போது தென்காசியில் உள்ள அலுவலகம் போலவே நாட்டின் 800 மாவட்டங்களில் நிறுவனங்களை அமைக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகின் பொருளாதார மந்தநிலை காரணமாக பெரிய டெக் நிறுவனங்கள்தங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்வதைப்போல சோஹோவில் என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு, வருவாயில் வேண்டுமானால் குறைவு இருக்குமே தவிர்த்து பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டம் இல்லை என்றும் நோ லே ஆஃப் பாலிசியை சோஹோ கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். நிறுவனத்தை விரிவுபடுத்த ஆரம்ப பங்கு வெளியீடான ஐபிஓ செய்வீர்களா என்ற கேள்விக்கு தற்போது அந்த எண்ணம் இல்லை என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.