இந்தியாவை புகழ்ந்து தள்ளிய சர்வதேச நாணய நிதியம்
நாடுகளின் முன்னேற்றம் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு பெரிய அளவில் பணம் முதலீடு செய்வதில் சர்வதேச நாணய நிதியத்தின் பங்கு மிகப்பெரியது.இந்த நிறுவனம்தான் உலகில் எந்த நாடு பொருளாதார ரீதியில் சறுக்கினாலும் கை கொடுக்கும் கடைசி ஆயுதமாக திகழ்கிறது. இந்த அமைப்பு அண்மையில் தனது கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்த கட்டுரையில் இந்தியாவில் மிகச்சிறந்த உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான மிகச்சிறந்த டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் தேவைப்படுவதால் அதனை இந்தியா சிறப்பாக செய்துள்ளதாகவும் புகழ்ந்துள்ளது
டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் மிகச்சிறப்பான வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் பலரின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவை உருமாற்றம் பெற்றுள்ளதாகவும், இது உலகின் பல நாடுகளுக்கும் ஒரு பாடம் என்றும் தெரிவித்துள்ளது. ஆதார் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட பணப் பரிமாற்ற திட்டம்,மற்றும் தரவு பரிமாற்றம் ஆகிய மூன்று நிலைகளில் இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு மிக மிக அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு பாராட்டியுள்ளது. Stacking up the Benefits: Lessons from India’s Digital Journey என்ற பெயரில் நீண்ட நெடிய கட்டுரையை அந்த அமைப்பு வெளியிட்டு இந்தியாவை புகழ்ந்து தள்ளியுள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல் அரசு வழங்கும் பணப்பலன்கள் முழுமையாக சாதாரண மக்களின் வங்கிக்கணக்கு வரை பெற முடிவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் உள் கட்டமைப்பினை திறம்பட வளர்த்து வைத்ததால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 1.1விழுக்காடு அளவுக்கு பணம் மிச்சமாகியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது. கொரோனா பெருந்தொற்று நேரத்தில் சுமார் 87 விழுக்காடு அளவுக்கு பணப்பலன்கள் நேரடியாக ஏழை மக்களுக்கு சென்று சேர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் கட்டமைப்புகள் வளர்ந்ததால் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மத்திய அரசுக்கான வரி வருவாய், குறிப்பாக வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 80 லட்சம் பேர் அதிகரித்துள்ளதாகவும் அந்த தரவு கூறுகிறது. ஆதார் சார்ந்த தரவுகளை பிற சேவைகளுக்கும் பயன்படுத்துவதாலும், ஆதார் விவரங்களை மற்ற அரசு சேவைகளுக்கு தருவதும் மிகச்சிறந்த பலனை தனிநபருக்கு மட்டுமின்றி, அரசு மற்றும் பொதுத்துறை வளர்ச்சிக்கும் உதவுவதாக ஐஎம்எஃப் புகழ்ந்துள்ளது.