உரிமை கோராத பணத்துக்கு என தனியாக ஒரு வசதி.. செம..!!!.
அண்மையில் ரிசர்வ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உரிமை கோராத பணம் இருப்பதாக வெளியான தகவல் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த நிலையில் இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் பேசியுள்ளார். அதில் உரிமை கோராத டெபாசிட் தொகைகள் தொடர்பான விவரங்களுக்கு என தனி போர்ட்டல் ஒன்றை தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். நிதி கொள்கைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற சக்தி காந்ததாஸ், உரிமை கோராத முதலீடுகளை எங்குசென்று தேடுவது என்று மக்கள் மத்தியில் ஒரு குழப்பம் இருப்பதாகவும், இதற்கு தீர்வு காண ஒரே இணைய முகவரியின் வாயிலாக பல வங்கிகளை இணைக்கும் வகையில் போர்ட்டல் அமைக்கப்படும் என்றார். கணக்கு தொடங்கிவிட்டு அதில் பணத்தை போட்டுவிட்டு திடீரென மறைந்தவர்களின் கணக்குகளை அவர்களின் வாரிசுகள் உரிமை கோராமல் இருப்பதும்,போட்ட முதலீடுகள் முதிர்ச்சி அடைந்ததே தெரியாமல் சில வாடிக்கையாளர்கள் இருப்பதுமே இந்தளவு பெரிய பணம் சேர காரணமாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகும் அந்த தொகை எடுக்கப்படாமல் இருந்தால் அதனை ரிசர்வ் வங்கி கைப்பற்றி பத்திரமாக வைத்துக்கொள்ளும், உரிய நபர் உரிய ஆதாரங்களுடன் வந்தால் அந்த தொகைக்கான வட்டியும் முதலும் சேர்த்து தரப்படும் என்றும் ரிசர்வ் வங்கி கூறுகிறது. கேட்பாரற்று கிடக்கும் பணம் அதிகம் உள்ள வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கியில் மட்டும் 8ஆயிரத்து86 கோடி ரூபாய் யாரும் உரிமை கோராமல் அப்படியே கிடக்கிறது என்கிறது ரிசர்வ் வங்கி புள்ளி விவரம்.