இந்திய சந்தைகளில் லேசான ஏற்றம்
ஏப்ரல் 6ந் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது. குறிப்பாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 143 புள்ளிகள் உயர்ந்து 59ஆயிரத்து 833 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 42 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகத்தை முடித்துக்கொண்டது. ஆஹா ஓஹோ என்று வர்த்தகம் நடைபெறவில்லை என்றாலும் 2,309 பங்குகள் விலை ஏற்றத்தையும்,1120 பங்குகள் விலை சரிவையும் கண்டன. 112 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, விலைவாசியை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டிவிகிதத்தை அதிகரிக்கும் என்று பலரும் காத்திருந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டது, முதலீட்டாளர்களை எந்த முடிவையும் எடுக்க விடாமல் மாற்றியது. இதனால் இந்திய சந்தைகளில் ஒரு வித மந்தநிலை காணப்பட்டது. சான்டூமா,ஐசிஐஎல்,ஆர்த்தி டிரக்ஸ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றம் பெற்றன. டாபர், ஜேகே லக்ஷ்மி ,ஷாப்பர்ஸ்டாப் உள்ளிட்ட பங்குகள் பெரியளவில் சரிந்தன. சென்னையில் உச்சத்தில் இருந்த தங்கம் விலை வியாழக்கிழமை லேசாக சரிந்து சற்று ஆறுதல் அளித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை 40 ரூபாய் சரிந்து 5 ஆயிரத்து 650 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி விலையும் 70 காசுகள் சரிந்தது. தங்கம் விலை ஒரு சவரன் 45 ஆயிரத்து 200 ரூபாயாக குறைந்துள்ளது. கட்டிவெள்ளி விலை கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து 80 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. தங்கம் வாங்க விரும்புவோர் இந்த விலையுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரத்தை கணக்கிட்டு பார்த்து எந்த கடையில் குறைந்த விலையில் வாங்குவது என்பது சிறந்த முதலீடாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.