சந்தை நிலவரம் என்ன சொல்கிறது?
ஏப்ரல் 11ம் தேதி , இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 311 புள்ளிகள் உயர்ந்து 60,157 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 98 புள்ளிகள் உயர்ந்து 17,722 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. வங்கிகள் மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் முதல் காலாண்டின் முடிவுகளை வெளியிட்டு வரும் நிலையில், அவை திடமாக இருப்பதால் முதலீட்டாளர்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளதுடன் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். வாடிக்கையாளர் சில்லறை பணவீக்க விகிதம் குறித்த தகவல் புதன்கிழமை வெளியாக இருக்கும் சூழலில் அது குறித்த எதிர்பார்ப்பின் காரணமாகவே சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்துள்ளன. அமெரிக்காவிலும் விலைவாசி தொடர்பான முக்கிய புள்ளிவிவரம் வெளியாக இருப்பதால் இந்த இரு தரவுகளையும் வைத்து உலக சந்தைகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. Kotak Mahindra Bank, JSW Steel, Eicher Motors, Bajaj Auto ,Tata Steel உள்ளிட்ட நிறுவன பங்குள் ஏற்றம் கண்டன.HCL Technologies, TCS, Infosys, Asian Paints,Wipro உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகள் சுமார் 1 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. சென்னையில் ஆபரணத்தங்கம் விலையிலும் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் இருந்தது. ஒரு சவரன் தங்கம் விலை செவ்வாய்க்கிழமை 45 ஆயிரத்து 40 ரூபாயாக இருந்தது.. ஒருசவரன் 240 ரூபாயும்,ஒரு கிராம் 30 ரூபாயும் அதிகரித்து 5 ஆயிரத்து 630 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் கிராமுக்கு 40 காசுகளும், கட்டிவெள்ளி விலை 400 ரூபாயும் அதிகரித்து விற்கப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி 80ரூபாய் 40 காசுகளுக்கும், கட்டிவெள்ளி விலை 80 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.தங்கம் வாங்கும்போது மேலே கூறிய விலையுடன் 3விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரம் சேரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்…