பங்குச்சந்தைகளால் முதலீட்டாளர்களுக்கு நிம்மதி!!
வடிவேலு கூறுவது போல கால் வைக்கும் இடமெல்லாம் வெடி வைக்கும் வகையில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள்,கடந்த 10 நாட்களாக ஓரளவு நிலைபெற்றுள்ளன என்றே சொல்ல வேண்டும். கடந்த சில நாட்களாக பெரிய மாற்றம் இல்லாமல் காணப்பட்டு வந்த இந்திய பங்குச்சந்தைகள் ஏப்ரல் 12ம் தேதியான புதன்கிழமை ஓரளவு டீசன்ட்டான வகையில் வணிகத்தை மேற்கொண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 235 புள்ளிகள் ஏற்றம் கண்டதால் 60 ஆயிரத்து 392 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதேபோல் 90 புள்ளிகள் ஏற்றம் கண்ட தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 17,812 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்துக் கொண்டன. துவக்கத்தில் பொங்கல் சாப்பிட்டது போல மந்தமாக துவங்கிய பங்குச்சந்தைகள் பின்னர் போகப்போக சுறுசுறுப்படைந்தன. தகவல்தொழில்நுட்பம்,ஆட்டோமொபைல் மற்றும் மருந்துத்துறை பங்குகள் ஏற்றம் கண்டன. Eicher Motors , Divis Labs, Bajaj Auto, Adani Enterprises, Dr Reddy’s Laboratories ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றம்பெற்றன.Power Grid Corp, NTPC, Nestle India, ONGC, UltraTech ஆகியன சரிந்தன. மொத்த பங்குகளில் 100 பங்குள் 52 வாரங்களில் இல்லாத உயர்வை சந்தித்தன. பங்குச்சந்தை ஒருபக்கம் நம்பிக்கை அளித்தாலும், தங்கத்தின் விலை கவலை அளித்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ஒரே நாளில் 400 விலை ரூபாய் உயர்ந்து 45,440 ரூபாய்க்கும்,ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 680 ரூபாயாகவும் விற்பனையானது. வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 81 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. கட்டிவெள்ளியின் விலையும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து 81 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையானது. தங்கம் விலை இங்கே கூறியதுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.