பங்குச்சந்தைகளுக்கு ஆர்வம் காட்டும் பெண்கள் எவ்வளவு பேர் தெரியுமா.. அசந்து போயிடுவீங்க..
இந்தியாவில் பரஸ்பர நிதி பற்றிய விழிப்புணர்வு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுபற்றி இந்திய பரஸ்பர நிதி சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் கொரோனாவுக்கு முன்பு அதாவது 2019ம் ஆண்டுக்கு முன்பு பரஸ்பர நிதியில் முதலீடு செய்த பெண்களின் எண்ணிக்கை 46.99 லட்சமாக இருந்ததாகவும், இது கடந்தாண்டு டிசம்பரில் 74.49 லட்சமாக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித்துவ எண்ணின் எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சமாக இருந்ததாகவும், இது தற்போது 3.77 கோடி ஆக உயர்ந்திருப்பதாகவும் அந்த அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் புதிதாக 40 லட்சம்பேர் பரஸ்பர நிதித் திட்டத்தில் சேர்ந்திருப்பதாக பரஸ்பர நிதிசங்கத்தின் தலைமை செயல் அதிகாரி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். முதலீடு செய்தவர்களின் வயதைப் பொருத்தவரையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் பங்களிப்பு 35விழுக்காடாக உள்ளது. 18 வயது முதல் 24 வயதுவரை உள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 18-24 வயதுள்ள பெண் முதலீட்டாளர்களின் அளவு மட்டும் 2.82 லட்சம் பேர் என்கிறது அந்த அறிக்கை. இந்த எண்ணிக்கை 4 மடங்கு அதிகமாகும். பெண் முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் சொத்தின் அளவு மட்டும் 6.13 டிரில்லியன் பணம் என்கிறது அந்த அறிக்கை. இந்தியாவில் SIP எனப்படும் சீரான முதலீடு செய்வோரின் எண்ணிக்கை 6.36 கோடியாக உயர்ந்திருக்கிறது என்கிறது புள்ளி விவரம். சிப் மூலம் பணம் செலுத்தி வருவோரின் மூலம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு என்பது 6 லட்சத்து 83 ஆயிரம் கோடிரூபாய் என்கிறது ஏஎம்எஃப்ஐ அமைப்பு. 2.05 கோடி பேர் நேரடி திட்டங்களிலும் 4.31 கோடி பேர் நார்மல் ரக சிப் திட்டங்களிலும் பணத்தை சீராக முதலீடு செய்து வருகின்றனர்.