என்னதான் முட்டிக்கிட்டாலும் சீனாவத்தான் நம்பி இருக்கோம்…
இந்தியாவில் இருந்து கொஞ்ச நிலத்தை கூட பக்கத்து நாட்டுக்கு தரமாட்டோம் என்று மார்தட்டும் அரசு சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்க எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை என்றே சொல்ல வேண்டும். மார்ச் 31ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் இறக்குமதி பொருட்களின் பட்டியலை மத்திய வணிகத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி கடந்த காலங்களைவிட தற்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் அளவு 4.16% உயர்ந்துள்ளது. அதாவது 98.5பில்லியன் டாலர் அளவுக்கான இறக்குமதியை சீனாவிடம் இருந்து இந்தியா பெற்று வருகிறது. 23ம் நிதியாண்டில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்தபடியே உள்ளது. ஏனெனில் இறக்குமதி அதிகரித்துள்ளது. ஆனால் ஏற்றுமதி மிகக்குறைவாக இருக்கிறது.கடந்த காலங்களைவிட தற்போது இந்தியாவில் இருந்து சீனாவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவு 28 விழுக்காடு குறைந்துள்ளது. 2022 நிதியாண்டில் 72.9 பில்லியனாக இருந்த வர்த்தக பற்றாக்குறை தற்போது மேலும் அதிகரித்து 77.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மோதல் போக்கு மற்றும் அமெரிக்காவின் உற்ற தோழனாக இந்தியா விலங்கியபோதும் சீனாவை இந்தியா நம்பியிருக்கும் சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. குறிப்பாக சிறு சிறு பொருட்கள் உற்பத்தியில் சீனாவின் கையே ஓங்கியிருக்கிறது. உரங்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் இறக்குமதி சீனா இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருவதால் சீனாவை நம்பியிருக்கும் சூழல் இந்த துறைகளில் குறைந்துள்ளது. சீனா மட்டுமின்றி அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளே இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் நாடுகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.