புலம்ப விட்ட விப்ரோ நிறுவனம்!!!
உலகளவில் நிலவும் பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு விப்ரோ நிறுவனம் அண்மையில் புதிதாக எடுக்கப்பட்ட புது பணியாளர்களுக்குசலுகைகளை பறித்ததாக புகார் எழுந்தது. இது இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுபற்றி அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜதின் தலால் அண்மையில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் கல்லூரிகளில் இருந்து புதிதாக வேலைக்கு என்று எடுக்கப்பட்டவர்களில் 90 விழுக்காடு பேர் பாதி சம்பளத்துக்கு வேலைக்கு சேர ஒப்புக்கொண்டதாக கூறி அதிர வைத்துள்ளார். அதாவது அதிக சம்பளத்துடன் காத்திருந்து நிறுவனத்தில் சேர்கிறீர்களா, இல்லை குறைவான சம்பளத்துடன் உடனே சேர்கிறீர்களா என்ற வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டபோது, சம்பளம் குறைவானாலும் பரவாயில்லை என்று 92 விழுக்காடு பணியாளர்கள் உடனே சேர்ந்திருப்பதாகவும் ஜதின் கூறியுள்ளார் கடந்த பிப்ரவரி மாதம் 6.5 லட்சம் ரூபாய்க்கு சம்பளம் என்று பேசி எடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு 3.25 லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளம் என்று அறிவிக்கப்பட்டதாகவும், குறைவான சம்பளம் போதும் என்று சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தொழிலாளர் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் சந்தையின் தேவை நிலையை பொருத்தே புதிதாக ஆட்களை தேர்வு செய்வோம் என்று விப்ரோ நிறுவனம் கூறியுள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் புதிதாக 5 ஆயிரம் மென்பொறியாளர்களை புதிதாக தங்கள் நிறுவனத்தில் சேர்த்துள்ளதாக விப்ரோ அறிவித்துள்ளது. விப்ரோவில் இருந்து வெளியேற விரும்புவோரின் விகிதம் 330அடிப்படை புள்ளிகளாக உயர்ந்துள்ளதாகவும் விப்ரோ அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். விப்ரோ நிறுவனத்தின் கடந்த காலாண்டு லாபம் 3 ஆயிரத்து 74 கோடியே 50 லட்சம் ரூபாயாக பதிவாகியுள்ளது. நிறுவனம் பெரிய நஷ்டத்தை சந்திக்காமல் 11.7 % லாபத்தை மட்டுமே பதிவிட்டுள்ளதாகவும் விப்ரோ வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.