செமயா பெர்ஃபார்ம் செய்த இந்திய சந்தைகள்
கடந்த சில மாதங்களாக உலகளவில் பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் இந்தியாவில் பெரிதாக எந்த சிக்கலும் ஏற்படவில்லை. மேலும் ரிசர்வ் வங்கியும் தனது வட்டி விகிதத்தை உயர்த்தாமல் நிறுத்தி வைத்தது. இந்த காரணிகளால் இந்திய பங்குச்சந்தைகள் மிகச்சிறப்பாக இயங்கின. இதன் விளைவாக மட்டும் கடந்த மாதம் 1.13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு இந்திய பங்குச்சந்தையில் வரவாக கிடைத்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 1.83 பில்லியன் அளவுக்கு முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கையில் எடுத்துச்சென்றனர்.இதனையடுத்து இந்திய சந்தைகள் அந்த நேரத்தில் சரிந்தன. தற்போது மீண்டும் முதலீட்டாளர்கள் இந்தியாவை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். உலகத்திலேயே வேறு எந்த பங்குச்சந்தையும் சிறப்பாக செய்யாத அளவுக்கு கடந்த ஏப்ரலில் இந்திய பங்குச்சந்தைகள் குறிப்பாக தேசிய பங்குச்சந்தை 4விழுக்காடு உயர்வை கண்டது. உலகத்திலேயே அதிக முதலீடுகள் ஈர்க்கும் நாடாக சீனா மாறியுள்ளது. அதாவது 48.19 பில்லியன் டாலர்களாக சீனாவுக்கு முதலீடுகள் கிடைத்துள்ளன.இதற்கு அடுத்தபடியாக ஜப்பானுக்கு 13.96 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகள் கிடைத்துள்ளன. அமெரிக்க வங்கிகள் படிப்படியாக திவாலாகி வரும் சூழலில் அமெரிக்க முதலீட்டாளர்களும் இந்தியா மற்றும் பிறநாட்டு பங்குச்சந்தைகளில் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர். அமெரிக்க பெடரல் ரிசர்வ் இந்த மாதம் கூடி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன. இதனால் அமெரிக்க சந்தைகள் மேலும் சரிய வாய்ப்புள்ளதால் இந்த மாதமும் உலகளவில் சரிவு காணப்படும் , அதே சமயம் சில நாடுகளில் முதலீடுகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.