ஆப்பிளுக்கு வலு சேர்க்கும் டாடா குழுமம்…
இந்தியாவில் ஆப்பிள் நிறுவன பொருட்கள் உற்பத்தி தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் தைவானைச் சேர்ந்த விஸ்ட்ரான் என்ற நிறுவனம் இதுவரை பெங்களுருவில் ஆப்பிள் போன்கள் மற்றும் தயாரிப்புகளை உற்பத்தி செய்தும் அசம்பிள் செய்தும் வந்தது. இந்த நிறுவனத்தின் ஆலையை அண்மையில் டாடா குழுமம் வாங்கியது. இதனையடுத்து டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் விரைவில் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் பணிகள் நடைபெற்று வருகிறது. விஸ்ட்ரான் மற்றும் இன்னும் பிற நிறுவனங்களின் பணிகளால் 2023ம் ஆண்டில் மட்டும் 40ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆப்பிள் நிறுவன பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. தற்போது வரை விஸ்ட்ரான் நிறுவனத்தில் 12 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.டாடா குழுமத்திடம் ஆலையை ஒப்படைக்க இருக்கும் விஸ்ட்ரான் நிறுவனம் அரசிடம் இருந்து பெற வேண்டிய மானியத்துக்காக காத்திருக்கிறது. இந்தாண்டு இறுதிக்குள் விஸ்ட்ரான் நிறுவனம் வெளியேறும்பட்சத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது உற்பத்தியை தொடங்கிவிடும். ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மாடலான ஐபோன் 15 மற்றும் அது சார்ந்த பொருட்களை டாடா குழுமத்தின் உதவியுடன் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஆலையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான ஒப்பந்தம் செய்யப்பட்டு உற்பத்தி மையமாக மாற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.