மணப்புரம் நிறுவனம் என்ன சொல்கிறது!!!!
இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கத்தை வைத்து பணம் தருவதிலும், வளர்ச்சிக்கான நிதிகளை அளிப்பதிலும் பெயர் பெற்ற நிறுவனமாக மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம் திகழ்கிறது. இந்த சூழலில் அண்மையில் அமலாக்கத்துறையினர் அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. பின்னர் 143 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கியதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது. இது பற்றி மணப்புரம் நிறுவனம் அண்மையில் தனது விளக்கத்தை அளித்துள்ளது. அதாவது மணப்புரம் நிறுவனத்தின் புரோமோட்டரான நந்தகுமாரின் தொடர்புடைய ஆவணங்கள் மட்டும்தான் எடுத்துச்செல்லப்பட்டு அவர் சார்ந்த பங்குகள் முடக்கப்பட்டதாகவும்,நிறுவனத்துக்கும் வரி ஏய்ப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மணப்புரம் ஆக்ரோ என்ற நிறுவனம் தொடர்பாகத்தான் விசாரணை நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் மணப்புரம் நிதி நிறுவனத்துக்கு பாதிப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளில் 140 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாகவும் நந்தகுமார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மணப்புரம் ஆக்ரோ நிறுவனம் ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இல்லாமல் பெரிய தொகையை வசூலித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. முறைகேடாக 143கோடி ரூபாய் மணப்புரம் நிறுவன வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டதை அவர்களிடமே திரும்ப அளித்துவிட்டதாகவும் மணப்புரம் தரப்பில் கூறப்பட்டாலும் அதற்கான எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடுத்தடுத்த நிகழ்வுகளால் மணப்புரம் நிறுவனம் தொடர்பான செய்திகள் சந்தையில் வலம் வரத் தொடங்கியுள்ளன.