HSBC வங்கியை உடைக்க கடும் எதிர்ப்பு!!!!
158 ஆண்டுகள் வரலாறு கொண்டது HSBC எனப்படும் ஹாங்காங் ஷாங்காய் பேங்கிங் கார்பரேஷன் , இந்த வங்கியை இரண்டாக உடைக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்த வங்கியின் வருடாந்திர பொதுக்கூட்டம் அண்மையில் நடந்தது. இதில் வங்கியை உடைக்க முதலீட்டாளர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். ஹாங்காங்கை தலைமையாக கொண்டு இயங்கிய வங்கி 30 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனுக்கு மாற்றப்பட்டது. இந்த வங்கியில் பெரும்பாலான வருவாய் ஆசியாவில் இருந்தே வருகிறது. ஆனால் ஆசியாவுக்கு தனியாக ஒரு வங்கி, பிற நாடுகளுக்கு ஒரு வங்கி என்று பிரித்தால் அது ஏற்கும்படியாக இருக்காது என்றும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆண்டுப் பொதுக்கூட்டம் நடந்த இடத்துக்கு வெளியே சிலர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். குறிப்பிட்ட இந்த வங்கி தனது ஆரம்பகால முதலீட்டாளர்களுக்கு இன்றளவும் டிவிடண்ட் தந்துகொண்டு உள்ளது. தற்போது வங்கியை உடைத்தால் அது தங்கள் டிவிடண்டுகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். சீனாவிலும் பெரிய அளவில் வணிகம் அதிகரித்துள்ள சூழலில் , பெருந்தொற்றுக்கு முன்பு இருந்த அளவுக்கு லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பும் குறைவாக உள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த லாபம், கடந்த மார்ச் மாதத்தில் அப்படியே கிட்டத்தட்ட இரட்டிப்பானது.அதாவது 5.8பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.