ஆப்பிள் நிறுவனத்தை புகழ்ந்த உலகின் மிகப்பெரிய ஜாம்பவான்!!!
பங்குச்சந்தையில் உலகளவில் பிரபலமான முதலீட்டாளரான வாரன் பஃபெட், தனது நிறுவனம் முதலீடு செய்ததிலேயே சிறந்த நிறுவனம் ஆப்பிள்தான் என்று பாராட்டியுள்ளார்.வாரன்பஃபெட் பெர்க்ஷைர் ஹாத்வே என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதில் அதிகப்படியா முதலீடுகள் ஆப்பிள் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற வணிகத்தில் இருந்து ஆப்பிளின் வணிகம் தனியாக தெரிவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். பெர்க்ஷைர் நிறுவனம் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆப்பிள் நிறுவன பங்குகள் கடந்த 2016ஆம் ஆண்டு வைத்திருந்ததாகவும், இதே நிறுவனத்தின் பங்குகள் 2023-ல் 153 பில்லியன் டாலர் அளவுக்கு வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மொத்தம் 328 பில்லியன் அமெரிக்க டாலர் பங்குகளை வைத்துள்ள பெர்க்ஷைர் நிறுவனம், 46விழுக்காடு பணத்தை ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நெடுங்காலமாக ஆப்பிள் நிறுவனத்தை பாராட்டி வரும் பஃபெட், ஆப்பிளை வெறும் தொழில்நுட்ப நிறுவனமாக பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன்கள் மக்களுக்கு அதிகம் தேவைப்படும் ஒரு சாதனம் என்றும் பஃபெட் புகழ்ந்துள்ளார். அண்மையில்கூட ஆப்பிள் நிறுவனத்தின் 5.6 விழுக்காடு பங்குகளை பெர்க்ஷைர் நிறுவனம் வாங்கியது. மேலும் கூட வாங்க திட்டமிட்டிருப்பதாகவும் பெர்க்ஷைர் நிறுவனம் கூறியுள்ளது.