அதானி குழுமம் குறித்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!!!
கடந்த ஜனவரி 24ம் தேதி ஹிண்டன்பர்க் என்ற அமெரிக்க நிறுவனம் அதானி குழுமம் மீது அடுக்கடுக்கான புகார்களை சொல்லி இருந்தது. இதனால் அதானி குழும பங்குகள் கடுமையாக சரிந்தன. தற்போது அதானி பங்குகள் மீண்டும் உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் அதானி குழுமத்தின் புகார் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் சிறப்பு குழுவை அமைத்தது. 6 பேர் கொண்ட அந்த குழு விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டிருந்தது. இது தவிர்த்து செபி அமைப்பும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது. நிலைமை இப்படி இருக்கையில் உச்சநீதிமன்றம் அறிவித்த குழு, தங்கள் விசாரணையை நிறைவு செய்து ஒரு முதல் கட்ட அறிக்கையை மூடி, சீல் வைத்த கவரில் போட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதேபோல் செபி அமைத்த குழுவும் கடந்த 2ம் தேதியே அறிக்கை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த குழு மேலும் விசாரணைக்கு காலஅவகாசம் கேட்க அதிக வாய்ப்புள்ளது. இந்த குழு 6 மாதங்களுக்குள் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அதானி குழும மோசடி புகார் குறித்து நிபுணர்கள் குழு தங்கள் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது, இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.