இதற்கு தானே ஆசைப்பட்டாய்!!!
அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த , அந்நாட்டு பெடரல் ரிசர்வ் வங்கி பல்வேறு கட்ட முயற்சிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான்,கடன்கள் மீதான வட்டி விகிதங்களை அமெரிக்க பெடரல் ரிசர்வ் உயர்த்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் முதல்முறையாக வருடாந்திர பணவீக்கம் 5விழுக்காட்டுக்கும் கீழ் பதிவாகியுள்ளது. இந்த விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தல் நடவடிக்கையால் இன்னும் சில காலத்துக்கு வட்டி உயர்வு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எழுத்தளவில்,பணவீக்கம் குறைந்ததாக இருந்தாலும், உண்மையில் அமெரிக்காவில் இன்னும் சாதாரண பொதுமக்களை பணவீக்கம் வாட்டி வதைத்து வருகிறது. எரிபொருள் மற்றும் பயன்படுத்திய வாகனங்களின் விலைகள் மிக அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கலவையான புள்ளிவிவரங்களால் அடுத்து கடன்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தலாமா வேண்டாமா என்பது பற்றி பெடரல் ரிசர்வ் முடிவெடுக்க இருக்கிறது. அமெரிக்காவில் விலைவாசி உயர்வு என்பது மார்ச் மாதத்தில் 0.1%,ஏப்ரல் மாதத்தில் 0.4% அதிகரித்துள்ளன.எதிர்பார்த்தபடியே உயர்ந்து வரும் விலைவாசி மீண்டும் நிச்சயம் கீழே விழும் என்கிறார்கள் அந்த நாட்டு நிபுணர்கள். பழங்கள்,காய்கனிகள்,மீன்,முட்டை உள்ளிட்டவற்றின் விலை அமெரிக்காவில் விழத் தொடங்கியிருக்கிறது.இதேபோல் அமெரிக்காவில் மின்சாரத்தின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. சேவை சார்ந்த பணவீக்கமும் கணிசமாக குறைந்து வருவதாக அந்தநாட்டு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாக பணவீக்கத்தால் அவதிப்பட்டு வந்த அமெரிக்கர்களுக்கு இந்த புள்ளிவிவரங்கள் பெரிய நிம்மதியை தந்துள்ளன. இதன் தாக்கம் அமெரிக்கா மட்டுமில்லாது உலகின் பலநாடுகளுக்கும் பெரிய ஆறுதலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் கச்சா எண்ணெய் விலையும் கட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.