புதிய சிஇஓ நியமிக்க காரணம் என்ன?
டெஸ்லா நிறுவனத்தின் முதலாளியான எலான் மஸ்க் அண்மையில் டிவிட்டர் நிறுவனத்தை பெருந்தொகை கொடுத்து வாங்கியிருந்தார். இந்நிலையில் டிவிட்டரில் பல ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பிய எலான் மஸ்க், தற்போது புதிய சிஇஓவாக லிண்டா என்ற பெண்ணை நியமித்துள்ளார். NBC நிறுவன பணியாளரான லிண்டா,டிவிட்டரின் பொறுப்புகளை கவனிக்க இருக்கிறார். இந்த நிலையில் லிண்டாவை நியமித்ததன் மூலம் தனது டிவிட்டர் நிறுவனத்தில் பணிச்சுமை தமக்கு குறையும் என்றும், அந்த நேரத்தில் டெஸ்லாவை மீண்டும் முன்னேற்ற பாடுபடுவேன் என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார். லிண்டா பதவியேற்க 6 வார காலம் உள்ளது வரை டிவிட்டர் நிறுவனத்தின் தற்காலிக தலைவராகவும், முதன்மை தொழில்நுட்ப அதிகாரியாகவும் மஸ்க் செயல்பட இருக்கிறார். 2023 முதல் காலாண்டில் டெஸ்லா நிறுவனத்தின் வருவாய் 24 விழுக்காடு குறைந்து 2.7 பில்லியன் டாலர் அளவுக்கு வீழ்ச்சி கண்டது. பல அதிரடிகளை செய்ய காத்திருக்கும் மஸ்க், டெஸ்லா நிறுவன கார்களையும் குறைந்த விலைக்கு விற்க முடிவெடுத்துள்ளார். மேலும் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சைபர்டிரக்கை இந்தாண்டின் 3-ஆம் காலாண்டில் மஸ்க் அறிமுகப்படுத்த இருக்கிறார். 441மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் அந்த நிறுவனத்தின் பணப்புழக்கம் குறைந்தது. டெஸ்லா வின் சந்தை மதிப்பு 19.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது. இது நடப்பாண்டில் சரிவு என்றாலும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியில் 18 விழுக்காடு அதிகமாகும். சந்தையில் டெஸ்லா நிறுவன பங்குகள் கணிசமாக வீழ்ந்த நிலையில் அந்த நிறுவனத்தின் கார்களின் விலையை குறைத்து விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில் டெஸ்லா இயங்கி வருகிறது.