பேறு கால விடுப்பை அதிகரிங்க…
மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் உள்ள முக்கியமான அமைப்பு நிதி ஆயோக், இந்த அமைப்பின் உறுப்பினர் வி.கே. பால் அரசுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். இந்த நிலையில் தனியார் மற்றும் அரசுத்துறைகளில் மகளிருக்கு மகப்பேறு விடுப்பாக தற்போது வழங்கப்பட்டு வரும் விடுப்பை 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். FICCI மகளிர் நிறுவனம் கேட்டுக்கொண்டபடி இந்த விடுப்பை 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக உயர்த்த தனியார் மற்றும் அரசுத்துறை நிறுவனங்கள் அமர்ந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பணி இடங்களில் குறிப்பாக தனியார் நிறுவனங்களில் குழந்தைகள் விளையாட கூடுதல் வசதி செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் முக்கியமான பணிக்கு அதிகமுக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ள பால், வருங்காலத்தில் இந்த துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும்,அதற்கு உண்டான முறையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் இந்த துறைக்கு குறைவான கவனம் அளிக்கப்படுவதாக பால் கூறியுள்ளார்.