அக்டோபர் 1 முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது!!
கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடந்தது.பல ஆயிரம் பேரை வங்கி வாசல்களில் நிறுத்திய செயலால் பாதிக்கப்பட்டோர் ஏராளம், இந்த நிலையில் பழைய 500,ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அப்போது அறிமுகப்படுத்தப்பட்டன.
கறுப்புப்பணத்தை நீக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை அதனை பதுக்குவோருக்கு இன்னும் சாதமாக அமையும் வகையில் 2ஆயிரம் நோட்டுகள் அறிமுகமாகின. இது அப்போதில் இருந்தே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
இந்த நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக மே 19ஆம் தேதி அறிவித்துள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அனைத்து வங்கிகளிலும் கொடுத்து அதற்கு நிகரான பணத்தை மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 நோட்டுகள் மட்டுமே மாற்ற வகைசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 2023 மார்ச் 31ஆம் தேதி வரை நிலவரப்படி வெறும் 10விழுக்காடு அளவுக்கு அதாவது 3.62லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே 2 ஆயிரம் ரூபாய் பணப்புழக்கம் உள்ளது.
வங்கிகள் உடனடியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளீன் நோட் பாலிசி என்ற அடிப்படையில் இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டே 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தங்கள் வசம் உள்ள பணத்தை திரும்ப வங்கிகளில் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது வரும் அக்டோபரில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்பதை ரிசர்வ் வங்கி நேரடியான வார்த்தையாக சொல்லாமல் அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.