இந்தியாவுக்கு வர டெஸ்லா தீவிரம்…
இந்தியாவில் டெஸ்லா கார் நிறுவனம் தனது வணிகத்தை தொடங்க மிக தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக இந்திய இணையமைச்சர், ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அண்மையில் டெஸ்லா நிறுவன அதிகாரிகள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தனர். அந்த சுற்றுப்பயணத்தின்போது, முதலீடுகளை செய்வது குறித்தும் தங்களுக்கு என்னென்ன தேவை என்பது குறித்தும் பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் பேசினர். கார் மற்றும் பேட்டரி உற்பத்தி செய்வதில் டெஸ்லா நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் பெரிய வர்த்தக அடித்தளத்தை அமைக்க டெஸ்லா நிறுவனம் விரும்புவதாகவும்,கார்களை பற்றி மட்டும் அவர்கள் பேசவில்லை என்றும்,ஆற்றல் துறை, மின்சார பேட்டரிகள் குறித்தும் பேசியதாக ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்தார். இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது குறித்து அரசாங்கம் கேட்டதாகவும் ஆனால் வெளிநாடுகளில் இருந்து கார்களை இறக்குமதி செய்து எவ்வளவு விற்பனையாகின்றன என்று பார்க்க டெஸ்லா நிறுவனம் விரும்புவதாகவும் இணையமைச்சர் தெரிவித்தார். டெஸ்லா நிறுவனத்துக்கு அமெரிக்கா மட்டுமின்றி,ஷாங்காய் மற்றும் பிராண்டன்பர்க் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன என்பது கூடுதல் தகவலாகும்.