சேஞ்ச் நஹி…
2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று சொன்னாலும் சொன்னது ரிசர்வ் வங்கி, ஊரில் உள்ள கருப்பு பணம் அத்தனை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் எங்கள் தலையில்தான் விடிகிறது என்று பெட்ரோல் பங்க் சங்கத்தினர் ரிசர்வ் வங்கியை நாடியுள்ளனர். போதுமான சில்லறை தரமுடியாமல் தவிக்கிறோம் என்றும் முகவர்கள் ரிசர்வ் வங்கியிடம் புலம்பியுள்ளார்கள். 2016ஆம் ஆண்டு பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொன்னபோது என்ன மனநிலை மக்களிடம் இருந்ததோ அதே மனநிலை தற்போதும் தொடர்வதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜய் பன்சால் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பின்கீழ்தான் இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் இயங்கி வருகின்றன. 200 ரூபாய் போன்ற சிறிய தொகைக்கு கூட 2ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டும் சூழல் உருவாகியுள்ளதாக அவர் புலம்பியுள்ளார். இதனால் சிக்கல் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார், பெட்ரோல் பங்குகளில் சில்லறை கிடைக்க வங்கிகள் ஏற்பாடு செய்தால் தங்களின் வணிகமும் சுமூகமாக இருக்கும் என்றும் அஜெய் தெரிவித்திருக்கிறார். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரத்தாகும் என்ற அச்சத்தால் மக்கள் 2 ஆயிரம் ரூபாய்களை நீட்டுவதால் கடந்த வாரம் வரை 10விழுக்காடு கூட புழங்காத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளதாகவும் சில்லறை தர முடியாமல் தவித்து வருவதாகவும் அஜய் தெரிவித்துள்ளார்.