இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கும் கார் நிறுவனங்கள்
இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை செய்ய கார் உற்பத்தியாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். நாட்டின் பொருளாதார நிலை மெல்ல உயர்ந்து வரும் சூழலில் இந்த முதலீடுகளை பெரிய கார் நிறுவனங்கள் செய்ய முன்வந்துள்ளன. மாருதி சுசுக்கி,மகேந்திரா அன்ட் மகேந்திரா டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மட்டும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிச்சயம் முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்பஷன் இன்ஜின் எனப்படும் எரிபொருளில் இயங்கும் இன்ஜின் உற்பத்தியும், மின்சார வாகன பாகங்களின் உற்பத்தியும் இதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது. கொரோனாவுக்கு முன்பிருந்த அளவுக்கு வாகன உற்பத்தி எட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் யுட்டிலிட்டி வெஹிகல் எனப்படும் suv ரக கார்களுக்கான வரவேற்பு அமோகமாக உள்ளதால் அதிலேயே மின்சார கார்களை மாற்றும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. ஹியூண்டாய் நிறுவனம் மட்டும்10 ஆண்டுகளில் சீரான இடைவெளியில் 20ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீடுகளை குவிக்கிறது. இதேபோல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்,மொத்த முதலீடுகளில் 27 விழுக்காடு உயர்த்தி 38ஆயிரம் கோடி ரூபாயை இறக்கியுள்ளது. இதேபோல் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் 5,300 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. மாருதி சுசுக்கி, எம்.ஜி, மகேந்திரா & மகேந்திரா ஆகிய நிறுவனங்களும் தங்கள் முதலீடுகளை கணிசமாக உயர்த்துகின்றன.