மாலுக்கு வரான்!!! தியேட்டர் பக்கம் வரமாட்றானே..!!!
இந்தியாவின் பெரிய நகரங்களில் ஷாப்பிங் மால்களின் ஆதிக்கம் எப்போதும் அதிகமாக இருக்கிறது. துவக்கத்தில் எந்த ஷாப்பிங் மால் புதிதாக இருக்கிறதோ அதில் கூட்டம் அலைமோதுகிறது பின்னர் நாளடைவில் அது படிப்படியாக குறைந்துவிடுகிறது. இந்த நிலையில் ஷாப்பிங் மால்களில் உள்ள திரையரங்குகளுக்கு கூட்டம் கணிசமாக குறைந்து வருவதால் இனி வரும் காலங்களில் ஷாப்பிங் மால்களில் திரையரங்குகளுக்கு இடம் ஒதுக்கலாமா வேண்டாமா என்று மறு பரிசீலனை செய்யும் அளவுக்கு நிலைமை சிக்கலாகியுள்ளது. இந்தியாவில் பல நகரங்களில் பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் திரையரங்கு சார்ந்த தொழில்களை செய்து வருகிறது. இந்த நிலையில் ஷாப்பிங் மால்களுக்கு வரும் கூட்டம், அங்குள்ள திரையரங்குகளுக்கு வருவதில்லை என்பதால் படிப்படியாக சில இடங்களில் தங்கள் சேவையை நிறுத்தி வருகின்றனர். சில இடங்களில் திரையரங்குகள் மூடப்படுகின்றன. அதிகரித்து வரும் திரையரங்க வாடகைகள்,செயல்பாட்டு கட்டணம் ஆகியவற்றின் காரணமாக திரையரங்க தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவும் போக பலரும் தங்கள் செல்போன்களிலேயே படங்களை பார்த்துவிடுவதால் திரையரங்கம் சென்று படம் பார்க்கும் ஆர்வமும் குறைந்து வருகிறது. கொரோனாவுக்கு பிறகு திரையரங்கம் வருவோரின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ந்துவிட்டதாக பல திரையரங்குகள் புலம்பத் தொடங்கியுள்ளனர். போதாதுகுறைக்கு ஷாப்பிங் மால்களில் மக்கள் காட்டும் ஆர்வம் சினிமாக்கள் மீது குறையத் தொடங்கியது போலவே மொக்கையான படங்களும் திரையரங்கு பக்கம் மக்களை இழுக்கத் தவறிவிடுவதாகவும் கூறப்படுகிறது. ஏப்ரல் மே மாதங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் இல்லாததால் பெரிய திரையரங்குகள் காற்று வாங்குகின்றன. பிவிஆர் ஐநாக்ஸில் 2019-20காலகட்டத்தில் 168 மில்லியன் பேர் தங்கள் திரையரங்குக்கு வந்ததாக கூறும் நிறுவனம் தற்போது அது 140 மில்லியனாக சுருங்கியுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் சேவை கட்டணங்களால் திரையரங்குகளுக்கு இடம் ஒதுக்கும் மால் உரிமையாளர்கள் அதனை வேறு பார்ட்டி ஹால் போல மாற்றவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி,மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களில் நிலைமை இதுவாகத்தான் இருக்கிறது என்கிறது களநிலவரம்.