நண்பனால் இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய லாபம்!!!
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கத் தொடங்கியது முதல் இந்தியா தனது ராஜதந்திரத்தை சிறப்பாக கையாண்டு வருகிறது. அமெரிக்காவின் கோபத்துக்கும் ஆளாகாமல், ரஷ்யாவுக்கும் ஆதரவு இல்லாமல், உக்ரைனையும் எதிர்க்காமல் நைசாக கழுவுற மீனுல, நழுவுற மீன் போல இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய் கிடைக்குமோ நாட்டு மக்களின் நண்மைக்காக நாங்கள் வாங்குகிறோம் என்கிறது இந்தியா. ரஷ்யாவும் இந்தியாவிடம் இருந்து அதிக ஆர்டர் வந்ததும் எடுத்துக்க நண்பா என்று அள்ளிக்கொடுத்து வருகிறது. மே மாதம் மட்டும் ரஷ்யாவிடம் இருந்து தினசரி 1.96 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி வருகிறது.இது கடந்த ஏப்ரலில் இருந்ததைவிடவும் அதிக அளவு இறக்குமதியாகும். போருக்கு முன்பு இந்தியா சவுதி அரேபியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை அதிகளவில் வாங்கி வந்தது. தற்போது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கியதால் சவுதியிடம் இருந்து வாங்கும் அளவு கணிசமாக குறைந்துவிட்டது. ரஷ்யாவிடம் இருந்து ஒரு பேரல் கச்சா எண்ணெயை வரியுடன் சேர்த்து 68.21 டாலர் அளவுக்கு இந்தியா வாங்கி வருகிறது. ஆனால் சவுதி அரேபியாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெயின் விலையோ,86.96 டாலராக உள்ளது. இதுவே ஈராக்கிடம் இருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெயின் விலையானது 77.77 டாலராக உள்ளது பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 9 விழுக்காடு சரிந்துள்ளதால் அடுத்தமாதம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடையவே அதிக வாய்ப்புகள் உள்ளன. ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கப்படும் கச்சா எண்ணெயானது இந்திய சுத்தீகரிப்பு நிலையங்களுக்கு கொள்ளை லாபத்தை அளித்து வருகிறது. வரும் நாட்களில் பொதுத்துறை சுத்தீகரிப்பு ஆலைகளுக்கு மேலும் லாபம் கொட்ட இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.