மீண்டும் முதலிடம் பிடித்தார் மஸ்க்…
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. ஆனால் அதற்காக கடுமையாக உழைத்து பெரிய ரிஸ்க் வெகு சிலர் மட்டும்தான் எடுக்கின்றனர். அப்படித்தான் தலைவன் மஸ்க் ரிஸ்க் எடுப்பதில் வல்லவர், பலமுறை தோற்றாலும் விடாமல் முயற்சிசெய்துகொண்டே இருப்பார். இந்த நிலையில் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் மீண்டும் முதலிடம் பிடித்திருக்கிறார். புளூம்பர்க் பில்லினியர்ஸ் இன்டெக்ஸ் என்ற அமைப்பு உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பிரான்சைச் சேர்ந்த ஆடை உற்பத்தியாளர் பெர்னார்ட் அர்னால்ட்டைவிட அதிகம் சம்பாதித்துள்ள மஸ்க் இரண்டாம் இடத்தில் இருந்து மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். மஸ்கின் சொத்துமதிப்பு 192 பில்லியன் அமெரிக்க டாலராகவும், பெர்னார்ட் அர்னால்டின் சொத்து மதிப்பு 187 பில்லியன் அமெரிக்க டாலராகவும் இருப்பதாக புளூம்பர்க் குறியீடு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த பட்டியலில் 3ஆம் இடத்தில் அமேசான் உரிமையாளரும், அடுத்த இடத்தில் பில்கேட்ஸும் உள்ளனர். பெர்னார்ட் அர்னால்டின் சொத்து மதிப்பு சற்று சறுக்கியபோது, மஸ்க் தனது செல்வாக்கை அதிகப்படுத்தியுள்ளார். இந்தாண்டில் இதுவரை மட்டும் டெஸ்லா நிறுவன பங்குகள் 89 விழுக்காடு அதிகரித்துள்ளது. டிவிட்டர் நிறுவன பங்குகளும், டெஸ்லா நிறுவன பங்குகளும் கடந்தாண்டு டிசம்பரில் வீழ்ந்த போது மஸ்கை பெர்னார்டு அர்னால்ட் மிஞ்சியிருந்த நிலையில் மஸ்குக்கும், அர்னால்டுக்கும் மிக நெருக்கமான போட்டி இருந்து வருகிறது.