இந்திய சந்தைகளில் கொட்டும் வெளிநாட்டு பணமழை…
இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த மாதம் மட்டும் 43 ஆயிரத்து 838 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் குவிந்துள்ளன. இந்த முதலீடுகள் என்பது 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். இந்த மாதத்தின் முதல் இரண்டு வர்த்தக நாட்களில் மட்டுமே சுமார் 6490 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதை குறிப்பதாக இந்த தரவுகள் இருக்கின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்தாண்டு ஆகஸ்ட்டில் 51,204 கோடி ரூபாய் முதலீடாக இந்திய சந்தைகள் பெற்றிருந்தன.சீனாவில் உள்ள பங்குகளை விற்றுவிட்டு இந்திய சந்தைகளில் அதிக முதலீடுகளை முதலீட்டாளர்கள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் வர்த்தக நாளில் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 240 புள்ளிகள் அதிகரித்து 62,787 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 59 புள்ளிகள் அதிகரித்துள்ளது. வர்த்தக நேர முடிவில் 18 ஆயிரத்து 593 புள்ளிகளாக நிஃப்டி இருந்தது. தேசிய பங்குச்சந்தையில்,மகேந்திரா அன்ட் மகேந்திரா,ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், கிராசிம் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் பெற்றன. டிவிஸ் லேப்,ஏசியன் பெயின்ட்ஸ்,நெஸ்ட்லே இந்தியா ஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன. தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 570ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 560 ரூபாயாக விற்கப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 77ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோ 100ரூபாய் குறைந்து 77 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலையுடன் ஜிஎஸ்டி 3 விழுக்காடு மற்றும் செய்கூலி,சேதாரத்தை சேர்க்கவேண்டும், இதில் செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதால் சரியான விலையை கணிக்க இயலாது. குறைவான செய்கூலி,சேதாரத்துடன் தரமான நகைகள் உள்ள கடைகளை கண்டுபிடித்து நகைகளை வாங்குவதே புத்திசாலித்தனம்.