மேலும் ஒரு மகுடம் சூடும் டிசிஎஸ்!!!
இந்திய பூர்விக நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இந்தியா மட்டுமின்றி உலகின் பலநாடுகளிலும் தனது கிளைகளை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனம் அண்மையில் தனது புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி,பிரிட்டனில் குறிப்பாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் அரசு ஆசிரியர்களுக்கான பென்சன் திட்டத்தை டிஜிட்டல் மயப்படுத்தும் ஒப்பந்தம் டாடா கன்சல்டன்சி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அடுத்த 10 ஆண்டுகள் செய்ய டாடா கன்சல்டன்சி நிறுவனம் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. பிரிட்டனில் மட்டும் 20லட்சம் பேர் இந்த ஓய்வூதிய திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஒரு சாஃப்ட்வேர் தயாரிப்பது என்பது உண்மையில் சவாலான விஷயம்தான். ஆசிரியர்களுக்கு தேவையான அவர்களுக்கு எளிதில் புரியும்படியான ஆவணங்களையும், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் கணக்கை சரிபார்த்துக் கொள்ளவும் புதிய திட்டம் வகை செய்கிறது. குறிப்பிட்ட இந்த திட்டம் என்பது பிரிட்டனிலேயே இரண்டாவது பெரிய அரசு திட்டமாகும். இதில் டிசிஎஸ் கைகோர்த்துள்ளது பெருமை அளிப்பதாக டிசிஎஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பிரிட்டனில் மட்டும் டிசிஎஸ் நிறுவனத்துக்கு 30 இடங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளன. டார்லிங்டன் பகுதியில் ஒரு சேவை மையம் அமைக்கவும் டிசிஎஸ் திட்டமிட்டு வருகிறது. திங்கட்கிழமை நிலவரப்படி டிசிஎஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 3 ஆயிரத்து 312 ரூபாயாக இருக்கிறது. இது பழைய விலையைவிட 0.20 விழுக்காடு அதிகமாகும்.