ஏ.ஐ. டெக்னாலஜி என்ன பொல்லாதது..விடுவமா நாங்க..
உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக இந்த பெயரை மக்கள் கேட்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.அது என்ன பெயர் என்றால் ஏ.ஐ. அதாவது செயற்கை நுண்ணறிவு. சிறியதாக ஒரு புள்ளி கிடைத்தாலே அதை பிரமாண்டமாக்கும் டாடா குழுமம்,இத்தனை பெரிய தொழில்நுட்பத்தை மட்டும் சும்மா விடுமா என்ன? கிட்டத்தட்ட 6 லட்சம் பேரை வேலைக்கு வைத்துள்ள டிசிஎஸ் நிறுவனம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர முடிவெடுத்துள்ளது. உலகின் பல நாடுகளிலும் டெக் பணியாளர்களுக்கு வேலை போகும் சூழலிலும் கூட டாடா கன்சல்டன்சி நிறுவனம் கடந்தாண்டில் 17.6 விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளதாக அந்நிறுவனம் காலரை தூக்கிவிட்டு சொல்கிறது. மேலும் தொழில்நுட்பத்தில் புதுவரவான செயற்கை நுண்ணறிவுநுட்பத்தில் அதிகம் முதலீடு செய்ய இருப்பதாக டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 5ஜி நுட்பம், ஜெனரேட்டிவ் ஏ.ஐ,இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் ஆகிய துறைகள் நல்ல வளர்ச்சி அடைந்து வருவதாகவும் அதிலும் டிசிஎஸ் கவனம் செலுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் வரும் செப்டம்பர் 16ஆம் தேதியுடன் விடைபெற இருக்கும் சூழலில் அந்த பதவிக்கு புதிதாக சேர்வு செய்யப்பட்ட கீர்த்திவாசனையும் சந்திரசேகர் பாராட்டியுள்ளார்.