விடுதலை விடுதலை விடுதலை….
ஒரு சராசரி மனிதருக்கு தற்போதெல்லாம் சக மனிதர்கள் அழைத்துப் பேசும் செல்போன் உரையாடல்களை விட, அதை வாங்குறீர்களா,இதை வாங்குகிறீர்களா, அது வேண்டுமா இது வேண்டுமா என்று தான் அதிக செல்போன் அழைப்புகள் வருகின்றன. மிக முக்கியமான ஒரு மீட்டிங்கில் இருக்கும்போதோ,இல்லை வண்டி ஓட்டும்போதோ இவர்களின் செல்போன் அழைப்புகள் வந்தால் கடுப்பின் உச்சகட்டத்துக்கே மக்கள் செல்கின்றனர். இந்த நிலையில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் நிதிசேவை பிரிவான பஜாஜ் பின்சர்வ்வில் இருந்து இனி வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வராத வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநரான சஞ்சிவ் பஜாஜ் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை அறிவித்தார். இன்னும் 3 மாதங்களில் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும், பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் இணையதளம் அல்லது செயலியில் தங்களுக்கு செல்போன் அழைப்புகள் வரக்கூடாது என்ற வசதியை மக்கள் தேர்வு செய்தால் அதில் இருந்து அழைப்புகள் வராது என்றும், தங்கள் தேவைக்கு மக்கள் விரும்பினால் அழைக்கும் வகையில் மாற்றங்கள் செய்ய இருப்பதாகவும் சஞ்சீவ் அறிவித்துள்ளார்.தேவையற்ற அழைப்புகளில் இருந்து இனி விடுதலை கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் நிறுவனம் எடுத்த முன்னெடுப்பைப் போலவே பிற நிறுவனங்களும் ஒரு முடிவுக்கு வந்தால் உண்மையில் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அழைப்பு வர கூடாது என்பதை தேர்வு செய்துவிட்டால், கடன் கேட்டு தங்களிடம் வரக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.