நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நெல்,ராகி உள்ளிட்ட பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காரிப் பருவ சாகுபடியை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த விலை உயர்வு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குவின்டால் நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலை 2,040ல் இருந்து 2183 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.மூங்க் தால் எனப்படும் பாசிப்பருப்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது ஒரு குவின்டாலுக்கு 7755 ரூபாயில் இருந்து 8558 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. 23 உணவுப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மணிப்பூர் மற்றும் பாலசோரில் உயிரிழந்தோருக்கு இந்த கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அறிவிப்புக்கு முன்னதாக டெல்லி சண்டிகர் சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சூரியகாந்தி வித்துக்களை வாங்க அரசு நடவடிக்கை எடுக்காததாக குற்றம்சாட்டும் விவசாயிகள் வேறு வழியின்றி சூரியகாந்தி விதைகளை குவிண்டாலுக்கு 4,000 ரூபாய்க்கு விற்பதாக ஆதங்கம் தெரிவித்துள்ளனர். ஹரியானாவில் ஒரு குவின்டால் சூரியகாந்தி விதைகள் 5,800 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து வாங்கவும் அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையாக 6,400 ரூபாய் உள்ள நிலையில் 600ரூபாய் ஒரு குவின்டாலுக்கு ஏன் குறைவாக வாங்கப்படுகிறது என்றும் விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.