பணப்புழக்கம் குறைந்துவிட்டதா?
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்த நிலையில் மக்களிடம் புழங்கும் பணத்தின் அளவு குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஜூன் 2ஆம் தேதி தரவுகளின்படி 83,242 கோடி ரூபாய் பணம் புழங்குவது குறைந்து 32 லட்சத்து 88ஆயிரம் கோடிரூபாயாக உள்ளது தெரியவந்திருக்கிறது. வழக்கமாக மக்கள் விதைப்பு செய்வதற்காக பணம் அதிகம் வைத்திருப்பது வழக்கம் ஆனால் 2,000 ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலானவை வங்கிக்கு திரும்பியுள்ளதால் மக்கள் கைகளில் பணம் புழங்குவது குறைந்துள்ளது. மே 19ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஜூன் 8ஆம் தேதி வரை 1.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளில் 89 விழுக்காடு 2017ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட பழையவை என்றும்,2018-19-ல் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. வரும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறும் நடவடிக்கை நிறுத்தப்படும் என்றும் ரிசர்வ் வங்கி ஏற்கனவே தெரிவித்துள்ளது. எச்டிஎப்சி, மகாராஷ்டிரா வங்கி,பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளிலும் 2,000ரூபாய் நோட்டுகள் அதிகளவில் டெபாசிட் ஆகின்றன.