பருவம் தவறிய மழையால் விலைவாசி உயரும் அபாயம்
இந்தியாவில் ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே பருவமழை தொடங்கினால் அது நல்ல அறிகுறியாக மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் இருக்கும். ஆனால் தற்போது மே மாதம் முடிந்து ஜூன் பாதி மாதமும் கடந்துவிட்டது எனினும் இந்தியாவில் வழக்கமாக பொழியவேண்டிய பருவமழை பதிவாகவே இல்லை. இப்படி காலதாமதமாக துவங்கும் பருவமழை நிச்சயம் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் தொடர்பாக டாயிட்ச் வங்கி தனது கணிப்பை வெளியிட்டுள்ளது. 2024 நிதியாண்டில் 5.2 விழுக்காடாக இருக்கும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.தற்போது வரை 53 விழுக்காடு குறைவான பருவமழையே பெய்திருக்கும் நிலையில் உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உணவுப்பொருட்களின் விலைவாசி உயராமல் இருந்தால் நிச்சயம் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.ஜூலை மாதத்திலும் பெரிய மழை பதிவாகாதபட்சத்தில் உணவுப்பொருட்கள் விலை தாறுமாறாக உயரும் அபாயம் உள்ளது. 2009, 2014 ஆம் ஆண்டுகளில் குறைவான மழையே பதிவானதால் உணவுப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தக்காளி விலை உயர்ந்துள்ள சூழலில், வெங்காயம்,உருளைக்கிழங்கு மற்றும் உணவு தானியங்களின் விலையும் கடுமையாக உயர வாய்ப்புள்ளது. இந்தாண்டு எல்நினோ விளைவு காரணமாக எதிர்பார்த்த அளவைவிட வித்தியாசமாகத்தான் மழை பொழிய வாய்ப்புள்ளதாக . இதன் காரணமாக பொருளாதார நிலை மாறுபட்டு விலைவாசியும், பணவீக்கமும் கணிசமாக உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு பருவமழை பொய்த்துப்போகும்பட்சத்தில் உள்நாட்டு உற்பத்தி 0.30%குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.