விலைவாசி என்ன தெரியுமா?
உற்பத்தி குறைவு காரணமாக தக்காளியின் விலை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 100 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. கடந்த வாரம் வரை ஒரு கிலோ தக்காளி 30 முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மொத்த கொள்முதலே 70 முதல் 80 ரூபாயாக அதிகரித்துள்ளது. திடீரென ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பே விலையேற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. அதீத வெப்பநிலை,பருவமழை தாமதம், உரிய விலை கிடைக்காததால் தக்காளியை பயிரிட விவசாயிகள் மத்தியில் ஆர்வம் குறைந்தது உள்ளிட்ட காரணிகளால் தக்காளி விளைச்சல் சரிந்தது. ஹரியானா,உத்தரபிரதேசம்,பெங்களுரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி ஏற்றுமதி குறைந்துவிட்டது.அண்மையில் பெய்த கனமழையால் தக்காளி செடிகள் சேதமடைந்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. செடிகளுடன் கம்பிகளை இணைத்திருந்த அமைப்பு செடிகள் மட்டுமே மிஞ்சியிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பூச்சிகள் தாக்குதலாலும் தக்காளி விளைச்சல் பாதிப்பை சந்தித்து உள்ளது. கடந்த மாதம் வரை 3-4 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் தக்காளி வயல்களை விவசாயிகள் டிராக்டர்கள் கொண்டு உழுது வந்த நிலையில் தற்போது 100ரூபாயை கடந்து விற்கப்படுகிறது.வடமாநிலங்களை கனமழை புரட்டிப்போட்டு வருவதால் அடுத்த சில வாரங்களுக்கு தக்காளி விலை கடுமையாக உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.