WORLDCUPஆல் அதிகரித்த விலை!!!..
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்பது இந்தியாவில் பெரிய திருவிழா போல நடக்கும். இந்த நாளில் பல நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்கு விடுமுறை விடும் நிகழ்வுகளையும் கடந்த காலங்களில் நாம் பார்க்க முடிந்தது. இந்த சூழலில் நடப்பு உலக்கக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை இந்தியா நடத்த இருக்கிறது. இதற்கான அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி சென்னையில் அக்டோபர் 8ஆம் தேதி இந்தியா விளையாடும் ஒரே ஒரு போட்டி நடைபெற இருக்கிறது. இதே போல் இந்தியாவின் 10 நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் உடன் இந்தியா மோதும் 50 ஓவர் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 1 லட்சம் பேர் வரை அமர்ந்து பார்க்கும் அளவுக்கு இடவசதி உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்க இருக்கிறது. இதற்கான டிக்கெட் எப்போது விற்பனையாகும் என்பது குறித்த அறிவிப்பே இதுவரை வெளியாகவில்லை. அதற்குள் அகமதாபாத் நட்சத்திர ஹோட்டல்களில் இப்போதே புக்கிங் தொடங்கியுள்ளது. அகமதாபாத்தில் வழக்கமாக இருக்கும் ஹோட்டல் டிக்கெட் கட்டணம், இப்போது 10 மடங்கு உயர்ந்துள்ளது. ஏராளமான ஹோட்டல்கள் இப்போதே நிரம்பிவிட்டன. 5 ஆயிரம் ,8 ஆயிரம் இருந்த அறை வாடகை 80 ஆயிரம்,1 லட்சம் ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. ஐடிசி ஹோட்டலில் வழக்கமாக 5,699 ரூபாய் வாடகை வசூலிக்கப்படும் நிலையில், அக்டோபர் 15 ஆம் தேதி 71 ஆயிரத்து 999 ரூபாயாக உள்ளது. ஐடிசி நர்மதா, மேரியட், ஹியாத், தாஜ் ஸ்கைலைன் ஆகிய ஹோட்டல்களில் ஒரு ரூம் கூட இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய பணக்காரர்கள், வெளிநாட்டில் வசிக்கும் பணக்காரர்கள் இந்த ஹோட்டல்களில் இப்போதே புக் செய்தனர். வரலாற்றில் மிக முக்கிய போட்டிகள் நடக்கும்போது பணம் படைத்தவர்களின் முதல் தேர்வாக இருப்பது நட்சத்திர ஹோட்டல்கள்தான்.பணம் செலவழிவதைப் பற்றி கவலைப்படாமல் லட்சங்களில் செலவு செய்யவும் ஏராளமான பணக்காரர்கள் தயாராக உள்ளனர். கடைசி நேரத்தில் கிடைக்கும் ஹோட்டல்களில் தங்க விரும்பும் ரசிகர்களுக்கு இரண்டாம் தர ஹோட்டல்களும் தயாராக இருக்கும் நிலையில்,அவை அந்தளவுக்கு இன்னும் நிரம்பவில்லை.