5 பேரை பலி கொடுத்தும் திருந்தவில்லையா ??
உலக வர்த்தகத்தில் கணிசமான பங்களிப்பது சுற்றுலாத்துறை. வித்தியாசமான அனுபவங்களை கொடுத்தால், கோடிகளை செலவு செய்து சுற்றுலா செல்ல பலரும் இன்றளவும் ஆர்வமுடன் உள்ளனர். இந்த வரிசையில்,
டைட்டானிக் கப்பலையும் அதை சித்தரித்த படத்தின் ஜாக்கையும் ரோசையும் யாரால்தான் மறக்க முடியும். அத்தனை பெரிய பிரமாண்ட கப்பல், உலகளவில் பெரிய வசூலை ஈட்டிய படங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில் டைடானிக் கப்பல் மூழ்கிய இடத்துக்கு சுற்றுலாவும் மிகவும் பிரபலமாகும். ஓஷன் கேட் என்ற நிறுவனம் டைடானிக் கப்பலுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று வந்தது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் இந்த நிறுவனம் 5 பெரிய பணக்காரர்களுடன் டைடானிக்கை சுற்றிப்பார்க்க சுற்றுலா அழைத்துச்சென்றபோது,அந்த நீர்மூழ்கிக்கப்பல் வெடித்துச்சிதறியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த ஐவரும் உடல் சிதறி உயிரிழந்தனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்று உலகின் பலநாடுகளும் புகார் தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் டைடானிக்கப்பலை சுற்றிப்பார்க்க ஓஷன் கேட் நிறுவனம் சுற்றுலா அழைத்துச்செல்ல தயாராக இருக்கிறது. இந்த சுற்றுலா அடுத்தாண்டு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்தாண்டு ஜூன் 12 முதல் 20ஆம் தேதி வரையும், ஜூன் 21முதல் 29 வரையும் என இரண்டு சாகச பயணத்தை ஓஷன் கேட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆழ்கடல் சுற்றுலா செல்ல ஒரு நபருக்கு 2,50,000 டாலர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மூழ்கியில் பயணம் செய்ய 6 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதில் பயணிக்க குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா செல்வோருக்கு தங்கும் வசதி,உணவு ஆகியவை நீர்மூழ்கிக் கப்பலிலேயே கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரிஸ்க் அதிகம் இருக்கும் என்ற போதிலும், டைடானிக் கப்பலை நேரில் சென்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பெரும் பணக்காரர்களும் இதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர்.