தகிக்கும் தங்கம் விலை..
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்து மீண்டும் 44 ஆயிரம் ரூபாயை நெருங்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக அமெரிக்க பங்குச்சந்தைகள் வலுவான நிலையில் இருந்ததால் தங்கத்தை சீண்டவே ஆள் இல்லாமல் இருந்தது. சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,919 டாலராக இருக்கிறது. இது கிட்டத்தட்ட 1 விழுக்காடு அதிகமாகும். இதன் விளைவாக இந்திய சந்தைகளில் தங்கம் விலை கணிசமாக குறைந்தது. ஆனால் வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் இந்திய சந்தைகள் பெரிதாக வீழ்ந்திருந்த நிலையில் தங்கத்தின் விலை திடீரென உயர்ந்திருக்கிறது. ஒரு கிராம் தங்கம் 38 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 495 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரத்து 960 ரூபாயாக இருந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 76 ரூபாய் 70 காசுகளாக இருந்தது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து 76 ஆயிரத்து 700 ரூபாயாக விற்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வீழ்ந்து வந்த தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருப்பது நடுத்தர மக்களை அச்சமடைய வைத்திருக்கிறது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு கட்டாய ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி,சேதாரம் சேர்ந்தால்தான் உண்மையான விலை தெரியவரும். ஆனால் செய்கூலி, சேதாரம் என்பது கடைக்கு கடை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.